நொவலின் லினக்ஸ் விளம்பரம்
ஆப்பிளின் "ஒரு மேக் வாங்குங்கள்" ("Get a Mac") விளம்பர பிரச்சாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் அப்பிரச்சாரத்தில் வெளிவந்த குறும்படங்களையும் பார்த்திருப்பீர்கள். வெள்ளைப் பின்னணி, மெருதுவான இசை, சாதாரண உடையில் ஒருவர், கோட் சூட்டில் ஒருவர் என்று குறும்படங்கள் ஒரே பாணியில் இருக்கும். சாதா உடையில் இருப்பவர் தன்னை ஒரு மேக் என்றும் கோர் சூட் போட்டவர் தன்னை ஒரு வின்டோஸ் கணினி என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் தன் அருமை பெருமைகளைப் பற்றி அலட்டுவார்கள் சொல்வார்கள். இது போன்ற விளம்பரங்கள் லினக்ஸுக்கு இல்லை. அந்த குறையைப் போக்கியுள்ளது நொவல் (Novell) நிறுவனம். நொவெல் லினக்ஸின் விளம்பரக் குறும்படங்கள் இதோ:
1. உலகில் நெம்பர் ஓன்
வின்டோஸும் ஃமெக்கும் மாறி மாறி நான்தான் கணினியுலகில் முதலிடம் என்று அடிபடுகிறார்கள். கடைசியில் கணினி உலகில் நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்று சந்தோஷப்படுகிறார்கள். அப்பொழுது லினக்ஸ் வந்து "உலகில் ஏறக்குறைய 3 கோடி லினக்ஸ் பயனர்கள் உள்ளார்கள்" என்று கூறுகிறார். வின்டோஸும் மேக்கும் "ஹ்ம்ம்! எவ்வளவு நாட்களாக நீங்கள் கணினி உலகில் உள்ளீர்கள்?" என்று கேட்க, லினக்ஸ் "வெகு நாட்களாக" என்று முடிக்கிறார்.
பின்குறிப்பு: வழமையாக லினக்ஸ் பயனர்கள் என்றால் சோடா புட்டி அணிந்த புத்தகப் பூச்சி என்று அடிக்கடி ஊடகங்களில் காட்டப்படுவதுண்டு. இந்த விளம்பரத்தில் இதற்கு மாறாக ஒரு அழகான பெண்மணி லினக்ஸாக வருவது, சாதாரண மக்கள் உபயோகிக்கக் கூடிய ஒரு இயங்குதளமாக லினக்ஸ் முன்னேறியுள்ளதைக் காட்டுகிறது.
2. காலத்திற்கேற்ற கோலம்
வின்டோஸ் அவருடைய புதிய விஸ்டாவை பற்றியும் மேக் அவருடைய லெபெர்ட் பற்றியும் பீற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடைய புதுத் தோற்றத்தைப் பற்றி லினக்ஸ் கேட்டுக் கொண்டு இருக்கும்போது, ஒருவர் வந்து லினக்ஸுக்கு புது ஜக்கெட்டையும் கண்ணாடியையும் அணிவிக்கிறார். "என்ன இது" என்று வின்டோஸ் கேட்க, "காலத்திற்கேற்ற கோலம்" என்கிறார் லினக்ஸ். "இதையெல்லாம் உங்களுக்கு இலவசமாக கொடுப்பார்களா!!" என்று மேக் வியக்கிறார். வின்டோஸோ "நான் இதே தோற்றத்தை இன்னும் ஆறாண்டுகள் மெயின்டெய்ன் பண்ணிக்குவேன்" என்று பெருமைப்படுகிறார்.
பின்குறிப்பு: வின்டோஸ் மேக் போல் லினக்ஸ் ஒரே ஒரு நிறுவனத்தின் சொத்தல்ல. ஆதலால், லினக்ஸின் தோற்றம் மாறிக் கொண்டேயிருக்கும். உதாரணத்துக்கு உபுண்டு லினக்ஸ் வழங்கல், வருடத்திற்கு இருமுறை புதிய வெளியீடுகளைத் தருகிறது.
3. எந்தக் கணினியிலும் லினக்ஸ் இயங்கும்
இந்தக் குறும்படத்தில் வின்டோஸும் மேக்கும் அவர்களினுடம் உள்ள சிறந்த நிரல்களை ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவரும் லினக்ஸை பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வந்த லினக்ஸ் "நீங்கள் லினக்ஸைப் பயன்படுத்துகிறீர்களா?" என்று கேட்க, மற்ற இருவரும் முதலில் மறுக்கிறார்கள், பின்னர் ஒப்புக் கொள்கிறார்கள்.
பின்குறிப்பு: வின்டோஸ் விஸ்டாவை எல்லாக் கணினிகளிலும் நிறுவ முடியாது. ஏனேனில் பில் கேட்ஸைப் பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு முன் வந்த கணினிகள் எல்லாம் பழையது. விஸ்டாவினை புதிய கணினிகளிலோ அல்லது சில வருடங்களுக்கு முன் வாங்கிய விலையுயர்ந்த கணினியிலோ மட்டும்தான் நிறுவ முடியும். வின்டோஸ் மென்பொருளின் விலையும் வாங்கும் கணினியின் விலையை உயர்த்துகிறது.
ஆப்பிளின் மேக் இயங்குதளம் ஆப்பிளின் கணினியில் மட்டும்தான் நிறுவ முடியும். ஆப்பிள் கணினிகள் சாதாரணக் கணினிகளைக் காட்டிலும் விலை உயர்ந்தவை.. தற்காலிகமாக ஆப்பிள் கணினிகளில் வின்டோஸையும் பாவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டி தங்களின் கணினிகளின் அதிக விலையை நியாயப்படுத்துகிறார்கள். லினக்ஸ் கணினி மட்டுமல்லாமல் கைத்தொலைபேசி போன்ற மற்ற சாதனங்களையும் இயக்கும் திறமையுடையது. லினக்ஸ் இலவசமாகக் கிடைப்பதால் அதைனை உபயோகிக்கும் உபகரணங்களின் விலை குறைவாக இருக்கும். லினக்ஸ் ஒரு திறந்த ஆணைமூல நிரல் என்பதால் எவரும் எப்போதும் லினக்ஸை தனக்கெற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
2 மறுமொழிகள்:
சாரு, நல்ல வேடிக்கையான குறும்படங்கள். 30 கோடி லினக்ஸ் பயனர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். அது தவறு. 3 கோடி என்று இருக்க வேண்டும் (=30 மில்லியன்)
நன்றி, தவறை சரி செய்துள்ளேன். இது அடிக்கடி எற்படும் குழப்பம். எனவே விக்சனரியிலும் கோடி மற்றும் இலட்சத்துக்கான விளக்கங்களை பதிந்துள்ளேன்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க