கூகளின் குசும்பு

பொதுவாக பெரிய பன்னாட்டு நிறுவனங்களென்றால் பல விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள், ஏதையுமே கொஞ்சம் சீரியஸா எடுத்துக் கொள்வார்கள், விளையாட்டுத் தனமாய் இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணுவீர்கள். ஆனால் இதுக்கெல்லாம் நேர்மாறு கூகள்தான். கூகள் போன்று நகைச்சுவை உணர்வுள்ள நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை (அப்படியொரு நிறுவனத்தை உங்கள் யாருக்காவது தெரிந்தால் மறுமொழியில் சொல்லுங்களேன்). சும்மா சொன்னா மட்டும் போதுமா உதாரணம் எதும் இல்லையான்னு நீங்க சொல்றது கேட்குது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.

1. நிலவில் ஆராய்ச்சிக் கூடம்

ஜூலை 20, 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தார். இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்து முப்பதியாறு ஆண்டுகள் ஆனதை நினவு கூறும் வகையில், ஜூலை 2005இல் கூகுள் தனது கூகள் நிலவு சேவையை வெளியிட்டது. இதோடு நிற்காமல் தாங்கள் நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை துவங்க இருப்பதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவயென்றும் தன் சொந்த இணையப் பக்கத்திலேயே விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் படித்து பாருங்கள் மிகவும் சுவரஸ்யமாகயும் நகைச்சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். சும்மா காமெடிக்காக மட்டும் எழுதாம நல்லா சிந்திச்சு எழுதியிருக்காங்க.

2. புறாக்களின் தரவரிசைப் பட்டியல்

லாரி பேஜும் சேர்கே ப்ரினும்கூகளின் தேடல் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கம் தந்தார்கள். இதுவும் அவர்களின் காமெடிதான். என்ன புரியலையா? உலக இணைய வலையின் கன்னிப் பருவத்தில் ஒரு சில நல்ல தேடல் இயந்திரங்களே இருந்தன. அப்போது ஸ்டான்ஃபொர்ட் பல்கலைகழகத்தில் லாரி பேஜும், ஸேர்கே ப்ரினும் முனைவர் ஆவதற்கு ஆராய்ந்து கொண்டுருந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்து என்னவென்றால் இணையத்தில் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு பக்கம் இருந்தால், அந்த விடயத்திற்குரிய பல சொற்களைக் கொண்டு மற்ற இணையப் பக்கங்கள் அந்த விடயமிருக்கும் பக்கத்திற்கு இணைப்புகள் தரும். அவர்களின் ஆராய்ச்சியில் உருவானதுதான் கூகள். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் பக்கத் தரவரிசைத்(page rank) தொழில்நுட்பம். இணையம் எவ்வளவு பெரியது! அதில் உள்ள இணையப் பக்கங்கள் அனைத்தையும் பகுத்தாய்ந்து அவைபற்றிய குறிச்சொற்களை சேமிப்பதற்கு அதிகளாவிய கணிக்கும் திறனுள்ள கணினிகளைத்தானே(supercomputers) பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த அருங்காரியத்தை சாதாரண கணினிகளை குழுக்களிட்டு (PC Clusters) கூகள் செய்து முடிக்கிறது. இதையே முன்குறிப்பிட்ட விளக்கப் பக்கத்தில் "புறாக் கூட்டம்" (pigeon cluster) என்று நக்லாய் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் பொதுவாக எல்லொருக்கும் தெரிந்தவை. இப்படி பகிரங்கமாகச் சொல்லாமல் என்னென்ன செய்திருப்பார்கள் கூகள்காரர்கள்? இன்று அருணின் பதிவில் கூகளின் இன்னொரு நக்கலைப் பத்தி எழுதியிருந்தார் (அந்த பதிவின் உந்துதலால் வந்ததுதான் இந்தப் பதிவு).

கூகள் மப்ஸ் மூலம் உலகின் வரைபடங்களைப் பார்க்கலாம். பார்பதோடு மட்டுமின்றி பல நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழியையும் கணிக்கலாம். இது துவங்கும் இடமும் முடியும் இடமும் வேவ்வேறு நாடுகளில் இருந்தாலும் வேலை செய்யும். அப்படி நியூ யோர்கிலிருந்து லண்டன் வருவத்திற்கான வழியைத் தேடினால் கூகள் மப்ஸ் காட்டும் வழி இதோ:அப்படித் தப்பா ஒன்னும் தெரியலையில்லையா? ஆனா இடதுபுறமிருக்கும் வழிகாட்டும் குறிப்புகளைப் பார்த்தீர்களா?

இருபத்திமூன்றாவது குறிப்பில் "அட்லான்டிக் கடலை நிச்சலடித்துக் கடக்கவும்" என்று வழிகாட்டி இருக்கிறார்கள். இது நக்கல்தானே :)

வேலை செய்வதற்கு கூகள் சிறந்த நிறுவனம். பிற்காலத்தில் அங்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் ...

நொவலின் லினக்ஸ் விளம்பரம்

ஆப்பிளின் "ஒரு மேக் வாங்குங்கள்" ("Get a Mac") விளம்பர பிரச்சாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் அப்பிரச்சாரத்தில் வெளிவந்த குறும்படங்களையும் பார்த்திருப்பீர்கள். வெள்ளைப் பின்னணி, மெருதுவான இசை, சாதாரண உடையில் ஒருவர், கோட் சூட்டில் ஒருவர் என்று குறும்படங்கள் ஒரே பாணியில் இருக்கும். சாதா உடையில் இருப்பவர் தன்னை ஒரு மேக் என்றும் கோர் சூட் போட்டவர் தன்னை ஒரு வின்டோஸ் கணினி என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் தன் அருமை பெருமைகளைப் பற்றி அலட்டுவார்கள் சொல்வார்கள். இது போன்ற விளம்பரங்கள் லினக்ஸுக்கு இல்லை. அந்த குறையைப் போக்கியுள்ளது நொவல் (Novell) நிறுவனம். நொவெல் லினக்ஸின் விளம்பரக் குறும்படங்கள் இதோ:

1. உலகில் நெம்பர் ஓன்

வின்டோஸும் ஃமெக்கும் மாறி மாறி நான்தான் கணினியுலகில் முதலிடம் என்று அடிபடுகிறார்கள். கடைசியில் கணினி உலகில் நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்று சந்தோஷப்படுகிறார்கள். அப்பொழுது லினக்ஸ் வந்து "உலகில் ஏறக்குறைய 3 கோடி லினக்ஸ் பயனர்கள் உள்ளார்கள்" என்று கூறுகிறார். வின்டோஸும் மேக்கும் "ஹ்ம்ம்! எவ்வளவு நாட்களாக நீங்கள் கணினி உலகில் உள்ளீர்கள்?" என்று கேட்க, லினக்ஸ் "வெகு நாட்களாக" என்று முடிக்கிறார்.


பின்குறிப்பு: வழமையாக லினக்ஸ் பயனர்கள் என்றால் சோடா புட்டி அணிந்த புத்தகப் பூச்சி என்று அடிக்கடி ஊடகங்களில் காட்டப்படுவதுண்டு. இந்த விளம்பரத்தில் இதற்கு மாறாக ஒரு அழகான பெண்மணி லினக்ஸாக வருவது, சாதாரண மக்கள் உபயோகிக்கக் கூடிய ஒரு இயங்குதளமாக லினக்ஸ் முன்னேறியுள்ளதைக் காட்டுகிறது.

2. காலத்திற்கேற்ற கோலம்

வின்டோஸ் அவருடைய புதிய விஸ்டாவை பற்றியும் மேக் அவருடைய லெபெர்ட் பற்றியும் பீற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடைய புதுத் தோற்றத்தைப் பற்றி லினக்ஸ் கேட்டுக் கொண்டு இருக்கும்போது, ஒருவர் வந்து லினக்ஸுக்கு புது ஜக்கெட்டையும் கண்ணாடியையும் அணிவிக்கிறார். "என்ன இது" என்று வின்டோஸ் கேட்க, "காலத்திற்கேற்ற கோலம்" என்கிறார் லினக்ஸ். "இதையெல்லாம் உங்களுக்கு இலவசமாக கொடுப்பார்களா!!" என்று மேக் வியக்கிறார். வின்டோஸோ "நான் இதே தோற்றத்தை இன்னும் ஆறாண்டுகள் மெயின்டெய்ன் பண்ணிக்குவேன்" என்று பெருமைப்படுகிறார்.


பின்குறிப்பு: வின்டோஸ் மேக் போல் லினக்ஸ் ஒரே ஒரு நிறுவனத்தின் சொத்தல்ல. ஆதலால், லினக்ஸின் தோற்றம் மாறிக் கொண்டேயிருக்கும். உதாரணத்துக்கு உபுண்டு லினக்ஸ் வழங்கல், வருடத்திற்கு இருமுறை புதிய வெளியீடுகளைத் தருகிறது.

3. எந்தக் கணினியிலும் லினக்ஸ் இயங்கும்

இந்தக் குறும்படத்தில் வின்டோஸும் மேக்கும் அவர்களினுடம் உள்ள சிறந்த நிரல்களை ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவரும் லினக்ஸை பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வந்த லினக்ஸ் "நீங்கள் லினக்ஸைப் பயன்படுத்துகிறீர்களா?" என்று கேட்க, மற்ற இருவரும் முதலில் மறுக்கிறார்கள், பின்னர் ஒப்புக் கொள்கிறார்கள்.


பின்குறிப்பு: வின்டோஸ் விஸ்டாவை எல்லாக் கணினிகளிலும் நிறுவ முடியாது. ஏனேனில் பில் கேட்ஸைப் பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு முன் வந்த கணினிகள் எல்லாம் பழையது. விஸ்டாவினை புதிய கணினிகளிலோ அல்லது சில வருடங்களுக்கு முன் வாங்கிய விலையுயர்ந்த கணினியிலோ மட்டும்தான் நிறுவ முடியும். வின்டோஸ் மென்பொருளின் விலையும் வாங்கும் கணினியின் விலையை உயர்த்துகிறது.
ஆப்பிளின் மேக் இயங்குதளம் ஆப்பிளின் கணினியில் மட்டும்தான் நிறுவ முடியும். ஆப்பிள் கணினிகள் சாதாரணக் கணினிகளைக் காட்டிலும் விலை உயர்ந்தவை.. தற்காலிகமாக ஆப்பிள் கணினிகளில் வின்டோஸையும் பாவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டி தங்களின் கணினிகளின் அதிக விலையை நியாயப்படுத்துகிறார்கள். லினக்ஸ் கணினி மட்டுமல்லாமல் கைத்தொலைபேசி போன்ற மற்ற சாதனங்களையும் இயக்கும் திறமையுடையது. லினக்ஸ் இலவசமாகக் கிடைப்பதால் அதைனை உபயோகிக்கும் உபகரணங்களின் விலை குறைவாக இருக்கும். லினக்ஸ் ஒரு திறந்த ஆணைமூல நிரல் என்பதால் எவரும் எப்போதும் லினக்ஸை தனக்கெற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பைத்தியம்

எனக்குத் தமிழென்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல, பொதுவா தமிழர்கள் மொழிப்பற்று உடையவர்கள். பிற்காலத்தில் இந்திய மொழிகள் அனைத்திலும் கணினியிலும் இணையத்திலும் இன்னபிற தொழிநுட்பத் துறைகளிலும் தமிழ் முதன்மை அடைய தமிழரின் மொழிப்பற்றும் ஒரு காரணமாக இருக்கும். எங்க தொடங்கி எங்கயொ போயிட்டேன். என்னுடைய தமிழ்ப் பைத்தியம் காரணமாக ஒழுங்காக கல்லூரிப் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ரவி போன்ற பிற தமிழ் ஆர்வலர்களுக்கும் இதே நிலமைதான். சர்கஸ் கோமாளி பந்துகளை juggle செய்வதுபோல், உயர்படிப்பையும் தமிழார்வத்தையும் மாற்றி மாற்றி கவனிக்க வேண்டியுள்ளது.

நீண்ட நாள் தமிழ்ப் படைப்புகளை படிக்காததாலும் எழுதாததாலும் சில இலக்கண மரபுகள் மறந்துபோனது. என் தமிழ்ச் சொல்வளமும் குன்றிப் போனது. இதை நிவர்த்தி செய்யவே தமிழ் வலைப் பதிவுகளை படிக்கத் துவங்கினேன். கூகளின் மூலமும் இணையத்தில் கிடைத்த நண்பர்கள் மூலமாகவும் நல்ல தமிழ்ப் பதிவுகளைக் கண்டுபிடித்து என்னுடைய கூகள் ஓடையகத்தில் (Google Reader) சேர்த்துள்ளேன். கல்லூரியில் வேலைப்பளு கூடினால், நான் அனைத்து பதிவுகளையும் படிப்பதில்லை. இப்படிக் குவிந்த பதிவுகளை எல்லாம் இந்த விடுமுறையில் படித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் மண் விழுந்துவிட்டது.

ஒரு பதிவு படிக்கும்போது அந்த பதிவை என் மனதில் மொழிபெயர்த்துப் பார்ப்பேன். அப்பொழுது அகப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை விக்சனரியில் சேர்த்துவிடுவேன். இப்படி ஒரு வாரம் ஆகியும், என் ஒடையகத்திலுள்ள பதிவுகளைப் படித்தபாடில்லை. கூகள் ஓடையகத்தில் 'trends' என்று ஒரு சேவை உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஓடையகத்தில் சேமித்துள்ள பதிவுகள், உங்களின் பதிவு வாசிக்கும் பழக்கங்கள் போன்றவை பற்றிய புள்ளிவிவரங்களை அறிய முடியும். என்னுடைய பதிவுகள் வாசிக்கும் பழக்கங்கள் பற்றிய புள்ளிவிவரம் கீழே.
இப்புள்ளி விவரத்தின்படி, துங்கிற நேரம்(6-12) தவிர மற்ற நேரம் எல்லாம் பதிவுகளைப் படிப்பதில் செலவிடுகிறேன். இந்த நேரங்களில் பதிவுகள் மட்டும் படிக்காமல், விக்சனரி, Facebook, மடற்குழு போன்றவற்றிற்கும் செலவிடுகிறேன். இருக்கிற மூன்று வாரத்தில் நல்லபிள்ளையா கல்லூரி வேலைகளை முடித்தால்தான் விடுமுறைக்குபின் அல்லோலப் படாமல் இருக்கலாம். ஆதாலல், இனி கல்லூரி வேலைக்கு பிறகுதான் தமிழ்தொண்டு (...ஹ்ஹ்ம்ம்ம் இதெல்லாம் தமிழ்த்தொண்டா...).

பி.கு.: இந்த பதிவு எழுதுவதற்கே இரண்டு மணி நேராமாச்சு :( ஆனாலும் பிற்காலத்தில இதே தப்பு செய்யாமல் இருக்க இது உதவும் என்று எண்ணத்தில் எழுதிவிட்டேன். சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் மறுமொழியில் தெரிவியுங்கள். முடிந்தால் தமிழ் விக்சனரியில் சேர்த்துவிடுங்கள்.

மடை திறந்து பாடல்

பாடல் : மடை திறந்து பாடும் நதியலை நான்.
படம் : நிழல்கள்.
குரல் : S P பாலசுப்ரமணியம்.
இசை : இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (அல்லது) வாலி


இந்த பாடலை ஒரு சொல்லிசை பாடலாக Remix செய்திருப்பதை ரவிசங்கர் அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த Remix பாடல் இதோ:


மேலிருக்கும் பாடலை இசையமைத்து பாடியவர்கள் "வல்லவன்". அவர்களின் இணையதளத்திற்குச் சென்று அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு, இவர்களின் இசைத்தட்டுகளை ஐ.இ.(UK)ல் எங்கே வாங்குவதென்று பார்ப்போமென்றால், பக்கம் முழுவதும் flashஆல் செய்திருக்கிறார்கள். Flash எல்ல கணணிகளிலும் சரியாக வேலை செய்யாது. அது மட்டுமின்றி Google போன்ற தேடல் இயந்திரங்களால் Flashஆல் கொண்டு செய்யப்பட்ட பக்கங்களைச் சரியாக பகுத்தாய்ய(analyse) இயலாது. இதனால் தேடல் முடிவுகளில் அவர்கள் பக்கம் முதலிடம் வகிக்காது. இந்த குறைபாடுகளை நிவேர்தி செய்ய முயலுவார்களா?? இவர்கள் மட்டுமின்றி ஏனைய தமிழ்ப் பக்கங்களும் முடிந்தளவு flashஐ தவிர்ப்பது நல்லது.

பாரிசும் யாழும்

நான் கடந்த நர்தார் விடுமுறையின்போது பாரிஸுக்குச் சென்றிருந்தேன். அங்கு sacre coeur/sacred heart எனும் தேவாலயம் உள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மோன்மார்ட்ரெ(Monmartre) மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் வேலைப்பாடுகள் பிரமாதம். மாமல்லபுரம் அளவுக்கு இல்லாட்டிலும், சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் அழகாகவே இருந்தது.

ஆலயத்தினுள், புகைப்படமெடுக்க முடியவில்லை. உள்ளே, ஒலிபெருக்கிகளில் தவழ்ந்துவரும் தியான ஒலியைக் கேட்டவுடன் மனதினில் ஒரு அமைதி. ஆலயத்தை சுற்றி வருகையில் ஓரிடத்தில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதனருகே, ஆலயத்தின் மின்சார மற்றும் தண்ணீர் செலவுகளுக்கு பக்தர்கள் காணிக்கையளித்து உதவுமாறு வேண்டி பல மொழிகளில் எழுதியிருந்தனர். தமிழிலிலும் எழுதியிருந்தார்கள். சாதராணமா ஒன்னோ இல்ல ரெண்டொ யுரொ மட்டும் போட்டிருப்பபேன். தமிழ்ல எழுதினதால 10 யுரொ போட்டேன்.

ஆலயத்தின் வெளிப் படிக்கட்டுகளில் பலர் அவர்களின் திறமையைக் காட்டி தானமீட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தர் அழகாக யாழை மீட்டிக் கொண்டிருந்தார். அதைக் கீழே காணலாம்



மேலும் இவ்வாலயத்தைச் சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் எராளம். அதை இன்னொரு பதிவில் ஏற்றுகிறேன்.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்