உபுண்டு 8.04 - ஹார்டி ஹெரான் (சிக்கல் - 1)

கடந்த மாதம் உபுண்டுவின் ஹார்டி ஹெரான் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நான் கடந்த வாரம் வரை எனது இயங்குதளத்தை புதிய பதிப்புக்கு மாற்றவில்லை. வார இறுதிதான் வருகிறதே எற்படும் சிக்கல்களை களைய நேரம் கிடைக்குமேயென நேற்று தொடங்கினேன்.

நான் உபுண்டு 7.10 "கட்ஸி கிப்பன்" இல் இருந்து 8.04க்கு மாறுவதால், Update Managerஇல் உள்ள "Upgrade" விசையை அழுத்தினேன். அதற்குபின், திரையில் வரும் குறிப்புகளை பின்பற்றினேன். புதிய பதிப்புக்கு மாற்ற சம்மதம் அளித்தபின், UpdateManager புதிய நிரல்களை பதிவிறக்கி (சுமார் 2 மணி நேரம்), நிறுவியது (சுமார் 1 மணி நேரம்).

கணினியை மீளத்துவக்கினேன். முதல் பிரச்சினை, எனது இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. பணிமேசையின் அறிவிக்கை இடத்தில் வன்பொருளுக்கான குறும்படம் இருந்தது.

அதை அழுத்தியபின் "Hardware Drivers" சாளரம் திறந்து, எனது கணினியில் உள்ள கம்பியில்லா இணைய தொடர்பு வன்பொருள் இயங்குவதற்கு, அவ்வன்பொருள் வணிகரின் உடைமை உரிமையுள்ள மென்பொருள் வேண்டும்மென அறிவித்தது.

திரைவெட்டு பின்னர் எடுத்தமையால் சற்று தவறாக

திரைவெட்டு பின்னர் எடுத்தமையால் சற்று தவறாக "in use" என்று காட்டுகிறது.


"Enable" விசையை அழுத்தினால், இந்த வன்பொருள் இயக்கி திறந்தமூல மென்பொருளாக இருப்பினும், இந்த வன்பொருளை இயக்க உடைமை உரிமையுள்ள தளநிரல் தேவை என்ற அறிவிப்பு வந்தது.

இப்போது நீங்கள் "Enable" விசையை அழுத்தாவிட்டால், இந்த வன்பொருள் வேலை செய்யாது, என்றும் சொன்னது. அவ்விசையை அழுத்திய பின்னர், இணையத்திலிருந்து நிரல்பொதிகள் தரவிறக்கி நிறுவப்படவேண்டும்.

ஆனால், இணைய தொடர்புக் கருவியில் தானே பிரச்சினை, பின்பு எப்படி தரவிறக்குவது!!! அது மட்டுமின்றி எனது கணினியும் இணைய வழிச்செயலியும் வெவ்வேறு அறைகளில் உள்ளன. எனவே கம்பி கொண்டு இணைப்பை உருவாக்குவதற்கு, ஏதாவதொன்றை மற்ற அறைக்கு மாற்ற வேண்டும்!!!

உபுண்டு நிரலாளர்கள் இந்த சுழ்நிலையப்பற்றி முன்யோசித்திருக்கலாம். பழைய இயங்குதள பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கு மாறும் முன்னர், இணைய தொடர்பு சார்ந்த மென்பொருள்கள் அனைத்தையும் பதிவிறக்கி வைத்திருந்து பின் நிறுவி இருக்கலாம். நல்லவேளை, மடிக்கணினியின் துணைகொண்டு தேவையான நிரல்களை நிறுவினேன்.

இதற்குப்பின்னும், வன்பொருள் வேலை செய்யாவிட்டால் System -> Administration பட்டியலில் Hardware Driversஐ தேர்வு செய்யவும். பின்தோன்றும் சாளரத்தில் வேண்டிய வன்பொருள் இயக்கியை கண்டுபிடித்து இயக்கவும்.


இரண்டாவது பிரச்சினை பற்றி அடுத்த பதிப்பில் எழுதுகிறேன். ஹார்டி ஹெரான் பற்றிய தமிழ் உபுண்டு குழுமத்தாரின் இடுகை இங்கே.

4 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

இந்த மாதிரி மேம்படுத்தலை விட புதிதாக நிறுவுதல் உங்களை பல கஷ்டங்களில் இருந்து விடுவிக்கும்.
இங்கு பாருங்கள்.
http://kumarlinux.blogspot.com

து. சாரங்கன் / Saru சொல்வது:

ஆனால் குமார், ஒவ்வொரு முறையும் புதிதாக நிறுவுவது மிகவும் சிரத்தையான வேலை. மேம்படுத்தும்போது, ஒரு சில கேள்விகளுக்கும் பதில் அளித்தால் போதும். ஆனால் புதிதாக நிறுவும்போது மிகவும் ஜாக்கிரதையாக பதில் அளிக்காவிட்டால் "Bootloader", "Partitions" போன்றவற்றை குழப்பிவிட வாய்ப்புண்டு.

உங்களுடைய தமிழ் எழுத்துரு பிரச்சினை எனக்கும் இருந்தது, அதை எப்படிப் போக்கினேன் என்று என் அடுத்த இடுகையில் எழுதுகிறேன்.

சயந்தன் சொல்வது:

உங்களுடைய தமிழ் எழுத்துரு பிரச்சினை எனக்கும் இருந்தது, அதை எப்படிப் போக்கினேன் என்று என் அடுத்த இடுகையில் எழுதுகிறேன்.//

அதை எழுதுங்க முதல்ல -தமிழ் எழுத்துக்கள் ஒட்டியும் ஒட்டாததும் போலத் தெரிகின்றன. இணைய உலாவியில் தற்காலிகமாக சூரியன் எழுத்துருவை பயன்படுத்துகிறேன்.

தவிர பயர்பொக்ஸ் பீட்டா வேறு அடிக்கடி உறைந்து போகிறது. :(

மகேஸ் சொல்வது:

நான் உபுண்டு வுக்கு மாற வேண்டும் என நினைத்து தரவிறக்கம் செய்ய நினைத்தேன் சுமார் 700 MB , தரவிறக்கம் செய்ய முடியவில்லை, வேறு எங்காவது சி.டிக்கள் கிடைக்குமா?

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்