உபுண்டு 8.04 - ஹார்டி ஹெரான் (சிக்கல் - 2)

முந்தைய இடுகையில் சொன்னது போல், உபுண்டு ஹெரானுக்கு என் கணினியை மாற்றினேன். இதில் பல புதிய வசதிகள் உள்ளன. இவற்றைப்பற்றி ஏற்கனவே மு.மயூரனும் வடுவூர் குமாரும் எழுதியுள்ளனர். நான் காத்துக் கிடந்த புதிய மென்பொருள் ஃபயர்ஃபாக்ஸ் 3, ஹெரானுக்கு மாறியதால் கிடைத்தது. ஆனால் தமிழ் இணைய தளங்கள் எதுவும் சரியாகவே தெரியவில்லை.

முதலில் ஃபயர்ஃபாக்ஸ் 3இல் தான் ஏதோ பிரச்சினை என்று எண்ணினேன். ஆனால் ஜிஎடிட்டிலும் இதே பிரச்சினைதான். பின்புதான் ஏதோ நினைப்பில் System > Preferences > Appearanceஐ தேர்வு செய்தேன். பின் தோன்றும் சாளரத்தில், Fonts கீற்றில் Details விசையை அழுத்தினேன்.


Font Rendering Details சாளரத்தில் Hinting தலைப்புக்கு கீழ் உள்ள தெரிவுகளை ஒவ்வொன்றாக மாற்றி பார்த்தேன். ஃபயர்ஃபாக்ஸ் போன்ற, சில நிரல்களில் மீளத்திறக்காமல் இம்மாற்றங்கள் தெரியாது. எனவே ஜிஎடிட் கொண்டு சோதித்துப் பார்த்தேன்.

வேவ்வேறு Smoothing மற்றும் Hinting தெரிவுகளை செய்து பார்த்தேன். முடிவு இதோ:
  1. Smoothing = None; Hinting = None

  2. Smoothing = Subpixel; Hinting = None

  3. Smoothing = Subpixel; Hinting = Slight

  4. Smoothing = Subpixel; Hinting = Medium

  5. Smoothing = Subpixel; Hinting = Full

Smoothing = Subpixel; Hinting = Slight, தமிழ் எழுத்துகளை நன்றாக காட்டுகின்றது. உங்களின் கணினித்திரை LCD அல்லாது CRT ஆக இருந்தால் உங்களுக்கு வேறொரு Smoothing/Hinting தெரிவு உகந்ததாக இருக்கலாம். அப்படி இருந்தால் தயவு செய்து மறுமொழியில் தெரிவியுங்கள்.

இதெல்லாத்தையும் பின்வரும் ஒரே கட்டளையிலும் செய்யும் ;-)
gconftool --type string --set /desktop/gnome/font_rendering/hinting "slight"

உபுண்டு 8.04 - ஹார்டி ஹெரான் (சிக்கல் - 1)

கடந்த மாதம் உபுண்டுவின் ஹார்டி ஹெரான் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நான் கடந்த வாரம் வரை எனது இயங்குதளத்தை புதிய பதிப்புக்கு மாற்றவில்லை. வார இறுதிதான் வருகிறதே எற்படும் சிக்கல்களை களைய நேரம் கிடைக்குமேயென நேற்று தொடங்கினேன்.

நான் உபுண்டு 7.10 "கட்ஸி கிப்பன்" இல் இருந்து 8.04க்கு மாறுவதால், Update Managerஇல் உள்ள "Upgrade" விசையை அழுத்தினேன். அதற்குபின், திரையில் வரும் குறிப்புகளை பின்பற்றினேன். புதிய பதிப்புக்கு மாற்ற சம்மதம் அளித்தபின், UpdateManager புதிய நிரல்களை பதிவிறக்கி (சுமார் 2 மணி நேரம்), நிறுவியது (சுமார் 1 மணி நேரம்).

கணினியை மீளத்துவக்கினேன். முதல் பிரச்சினை, எனது இணைய இணைப்பு வேலை செய்யவில்லை. பணிமேசையின் அறிவிக்கை இடத்தில் வன்பொருளுக்கான குறும்படம் இருந்தது.

அதை அழுத்தியபின் "Hardware Drivers" சாளரம் திறந்து, எனது கணினியில் உள்ள கம்பியில்லா இணைய தொடர்பு வன்பொருள் இயங்குவதற்கு, அவ்வன்பொருள் வணிகரின் உடைமை உரிமையுள்ள மென்பொருள் வேண்டும்மென அறிவித்தது.

திரைவெட்டு பின்னர் எடுத்தமையால் சற்று தவறாக

திரைவெட்டு பின்னர் எடுத்தமையால் சற்று தவறாக "in use" என்று காட்டுகிறது.


"Enable" விசையை அழுத்தினால், இந்த வன்பொருள் இயக்கி திறந்தமூல மென்பொருளாக இருப்பினும், இந்த வன்பொருளை இயக்க உடைமை உரிமையுள்ள தளநிரல் தேவை என்ற அறிவிப்பு வந்தது.

இப்போது நீங்கள் "Enable" விசையை அழுத்தாவிட்டால், இந்த வன்பொருள் வேலை செய்யாது, என்றும் சொன்னது. அவ்விசையை அழுத்திய பின்னர், இணையத்திலிருந்து நிரல்பொதிகள் தரவிறக்கி நிறுவப்படவேண்டும்.

ஆனால், இணைய தொடர்புக் கருவியில் தானே பிரச்சினை, பின்பு எப்படி தரவிறக்குவது!!! அது மட்டுமின்றி எனது கணினியும் இணைய வழிச்செயலியும் வெவ்வேறு அறைகளில் உள்ளன. எனவே கம்பி கொண்டு இணைப்பை உருவாக்குவதற்கு, ஏதாவதொன்றை மற்ற அறைக்கு மாற்ற வேண்டும்!!!

உபுண்டு நிரலாளர்கள் இந்த சுழ்நிலையப்பற்றி முன்யோசித்திருக்கலாம். பழைய இயங்குதள பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கு மாறும் முன்னர், இணைய தொடர்பு சார்ந்த மென்பொருள்கள் அனைத்தையும் பதிவிறக்கி வைத்திருந்து பின் நிறுவி இருக்கலாம். நல்லவேளை, மடிக்கணினியின் துணைகொண்டு தேவையான நிரல்களை நிறுவினேன்.

இதற்குப்பின்னும், வன்பொருள் வேலை செய்யாவிட்டால் System -> Administration பட்டியலில் Hardware Driversஐ தேர்வு செய்யவும். பின்தோன்றும் சாளரத்தில் வேண்டிய வன்பொருள் இயக்கியை கண்டுபிடித்து இயக்கவும்.


இரண்டாவது பிரச்சினை பற்றி அடுத்த பதிப்பில் எழுதுகிறேன். ஹார்டி ஹெரான் பற்றிய தமிழ் உபுண்டு குழுமத்தாரின் இடுகை இங்கே.

சுதுர்சன ஹோமம் (குறொளி சொர்ண காமாட்சி அம்மன் கோவில்)

நேற்று (30-ஆடி-07) எங்கள் குறோளி சொர்ண காமாட்சி அம்மன் கோவிலில் விஷ்ணு திருவுருவத்தை நிறுவி சுதர்சன ஹோமத்தை நடாத்தினார்கள். இரண்டோ மூன்று வருடங்களுக்கு முன் ஒரு "Community centre"இல் ஒரு பெட்டியில் அம்மனின் படங்களை வைத்து தொடங்கிய இக்கோவில் இப்பொழுது ஒரு இடத்தை leaseஇல் எடுத்து ஊர்க்கோவில்கள் போல வளர்ந்துள்ளது. முன்பெல்லாம் கோவிலுக்கு போக வேண்டுமென்றால் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்பொழுது எங்களுக்கென்றே ஒரு கோவில் உள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

சுதர்சன ஹோமத்திலிருந்து சில படங்கள்:

கோவிலில் இசைக்கப்பட்ட நாதஸ்வர மேளயிசையின் நிகழ்படம்:

ஹோமத்தின் முடிவில் நல்லூரைச் சார்ந்த பெரியவர் ஒருவர் பேசினார். நிகழ்படமாக எடுக்க எண்ணியிருந்தேன் ஆனால் எனது கமிராவின் பாட்டரி தீர்ந்துவிட்டது :-( அவர் சொன்ன, என் மனதில் நின்ற சிலவிடயங்கள்:

சுதுர்சனம் என்பது விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரமேயாகும்.... கண்ணன் என்று பெயர் வரக் காரணம், தன் ஒரு கண்ணை இழந்து சிவனே பூஜித்த சுதர்சனத்தை பெற்றதால்தான்.... நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாம் நலமாக இருப்பதற்கு காரணம் நாம் செய்த புண்ணியம்தான்.... இச்சுதர்சன ஹோமத்தின் மூலம் நாம் மட்டுமின்றி நமது ஊரும் நாடும் உலகமும் நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிகிறான்.... நமது கலாச்சாரத்தையும் ஒழுகத்தையும் மறக்காமல் இருக்கவும் நமது தலைமுறையினரும் அவற்றை பின்பற்றவும் உதவுவது இக்கோயில்கள்தான்.... எனவே இக்கோயில்கள் மேன்மேலும் வளர உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.... எதை எடுத்தீர்களோ அது இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது, எதை வைத்திருக்கிறீர்களோ அதுவும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது, நீங்கள் கொண்டுபோவது ஏதுமில்லை, எனவே இயன்ற அளவு கோவிலை முன்னெற்ற உதவுங்கள்.

சொல்ல மறந்திட்டேன் கோயில் சாப்பாடு - தயிர்சாதம், தோசை, புளிசாதம், சம்பல், சாம்பார், லட்டு, முறுக்கு, மைசூர் பாகு - அப்படின்னு சூப்பரோ சூப்பர். இப்பகூட லட்டையும் முறுக்கையும் கொறிச்சுகிட்டுதான் இந்த இடுகையை எழுதிக்கிட்டிருக்கேன் :-D

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்