சுதுர்சன ஹோமம் (குறொளி சொர்ண காமாட்சி அம்மன் கோவில்)

நேற்று (30-ஆடி-07) எங்கள் குறோளி சொர்ண காமாட்சி அம்மன் கோவிலில் விஷ்ணு திருவுருவத்தை நிறுவி சுதர்சன ஹோமத்தை நடாத்தினார்கள். இரண்டோ மூன்று வருடங்களுக்கு முன் ஒரு "Community centre"இல் ஒரு பெட்டியில் அம்மனின் படங்களை வைத்து தொடங்கிய இக்கோவில் இப்பொழுது ஒரு இடத்தை leaseஇல் எடுத்து ஊர்க்கோவில்கள் போல வளர்ந்துள்ளது. முன்பெல்லாம் கோவிலுக்கு போக வேண்டுமென்றால் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்பொழுது எங்களுக்கென்றே ஒரு கோவில் உள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

சுதர்சன ஹோமத்திலிருந்து சில படங்கள்:

கோவிலில் இசைக்கப்பட்ட நாதஸ்வர மேளயிசையின் நிகழ்படம்:

ஹோமத்தின் முடிவில் நல்லூரைச் சார்ந்த பெரியவர் ஒருவர் பேசினார். நிகழ்படமாக எடுக்க எண்ணியிருந்தேன் ஆனால் எனது கமிராவின் பாட்டரி தீர்ந்துவிட்டது :-( அவர் சொன்ன, என் மனதில் நின்ற சிலவிடயங்கள்:

சுதுர்சனம் என்பது விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரமேயாகும்.... கண்ணன் என்று பெயர் வரக் காரணம், தன் ஒரு கண்ணை இழந்து சிவனே பூஜித்த சுதர்சனத்தை பெற்றதால்தான்.... நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் நாம் நலமாக இருப்பதற்கு காரணம் நாம் செய்த புண்ணியம்தான்.... இச்சுதர்சன ஹோமத்தின் மூலம் நாம் மட்டுமின்றி நமது ஊரும் நாடும் உலகமும் நல்வாழ்வு வாழ இறைவன் அருள் புரிகிறான்.... நமது கலாச்சாரத்தையும் ஒழுகத்தையும் மறக்காமல் இருக்கவும் நமது தலைமுறையினரும் அவற்றை பின்பற்றவும் உதவுவது இக்கோயில்கள்தான்.... எனவே இக்கோயில்கள் மேன்மேலும் வளர உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.... எதை எடுத்தீர்களோ அது இங்கிருந்துதான் எடுக்கப்பட்டது, எதை வைத்திருக்கிறீர்களோ அதுவும் இங்கிருந்தே எடுக்கப்பட்டது, நீங்கள் கொண்டுபோவது ஏதுமில்லை, எனவே இயன்ற அளவு கோவிலை முன்னெற்ற உதவுங்கள்.

சொல்ல மறந்திட்டேன் கோயில் சாப்பாடு - தயிர்சாதம், தோசை, புளிசாதம், சம்பல், சாம்பார், லட்டு, முறுக்கு, மைசூர் பாகு - அப்படின்னு சூப்பரோ சூப்பர். இப்பகூட லட்டையும் முறுக்கையும் கொறிச்சுகிட்டுதான் இந்த இடுகையை எழுதிக்கிட்டிருக்கேன் :-D

ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்

நாலு வருசம் போனதே தெரியாது. இப்ப நான் ஒரு "மென்பொருள் பொறியில் குரு" (Master of Software Engineering என்கிறத தமிழ் விக்சனரி மூலமா மொழிபெயர்தேன் ;-). முதல் வகுப்புல வேற பாஸ் பண்ணிட்டெனா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே சந்தோஷம். உடனே உற்றார் உறவினர் எல்லாத்துக்கும் ஃபொன்ல தெரிவிச்சி, ஒவ்வொருத்தரும் வாழ்த்து சொல்லி போதும் போதும்னு ஆயிடுச்சு. தம்பிக்கு ஒரு பக்கம் சந்தோஷமும் இன்னொரு பக்கம் "நாமாளும் இப்ப நல்ல டிகிரி வாங்கனுமே"ன்னு கவலை. ஒரு விதத்தில அண்ணனா பிறந்தது நல்லதுதான் (He has to exceed or atleast meet the standards I set).

ரொம்ப நாளா ஒரு பதிவும் போடல. நிறைய விசயங்கள் நடந்திருக்கு. இங்கிலாந்தில் ஒரே மழையும் வெள்ளமும். புதனன்று கொர்டன் பிரவுன் புதிய பிரதமரா பதிவியெற்றார். இன்று, லண்டனில் வெடிக்கவிருந்த இரண்டு கார் குண்டுகளை போலிஸார் செயலிழக்கச் செய்தனர். ஜூலை 1ஆம் தேதியில் இருந்து, பொதுவான காற்றோட்டம் குறைந்த இடங்களில் (அலுவலகங்கள், அறைகள், குடியகங்கள் [pubs = ஒயின் ஷொப்] போன்றவற்றில்) புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் சட்டம் அமூல்படுத்தப்படவுள்ளது.

இனிமே கொஞ்சம் ரெஸ்ட், அதுக்கப்புறம் வேலை தொடங்கிட்ட நாயா பேயா அலைய வேண்டியதுதான் ( 8AM - 6PM வேலை, 3 மணி நேரம் போயிட்டு வர). மொத்ததில் மொக்கை பதிவை விட ஒரு துளி மேலான பதிவு இது :)

இப்படிக்கு,
    சாரு

கானா பாட்டுக்கு ஜப்பானியர்கள் ஆடினால் ...

இந்தியாவில் இருந்தபோது, முத்து படம் ஜப்பானில் நூறு நாளைக்கு மேல் ஓடியதாக படித்த ஞாபகம் உண்டு. ஆனால் ஜப்பானியர்கள் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதோடும் இசையை கேட்பதோடும் நில்லாமல் ஆடியும் காட்டுகிறார்கள் பாருங்கள்.

கில்லி படத்தில் வரும் ஷல்லா லா பாடல்:

இது என்ன படப்பாடல் என்று தெரியவில்லை, ஆனால் செம குத்து போட்டிருக்காங்க:

சமையல் குறிப்புகள்: நிகழ்படங்கள்

தொழில்நுட்பம் எவ்வளவு முன்னெறிடுச்சுன்னு பாருங்க. சமையல் குறிப்பு எல்லாம் இப்ப நிகழ்படமா இணையத்தில் கிடைக்கிறது. அப்படி ஒரு குறிப்புதான் இது.

VideoJug: பத்து நிமிடங்களில் சிக்கன் கறி (குழம்பு)

இந்த பத்து நிமிடக் கணக்கில் தேவையானவற்றை வெட்டுவதையெல்லாம் சேர்க்கவில்லை போலும். சமையல் குறிப்பில தேவையான பாத்திரங்கள் (பெரியக் கத்தி, சின்னக் கத்தி) பற்றிக் குறிப்பிடும்போது நானும் என் நண்பரும் சிரித்தேவிட்டோம். ஆனாலும், சன் டிவியில காரத்தே வீரர் ஹுசைனி சமைத்ததைப் (முயற்சித்ததைப்) போல வருமா ;-)

உ.இ.ப.மா.சங்கம் கலை விழா 2007

உரும்பிராய் இந்துக்கல்லூரி பழைய மாணவர்(உ.இ.ப.மா) சங்கம் பிரித்தானிய கிழை வருடா வருடம் ஒன்று கூடலும் கலை நிகழ்சிகளையும் நடாத்தி(இலங்கைத் தமிழில் 'நடத்தி') வருகிறது. இந்த வருடம் மார்ச் 17ஆம் தேதி இது நடந்தது. இதுவரை நான் தமிழ் கலைநிகழ்சிக்களைப் பார்த்திராததால் அம்மா சொன்னவுடனே ஓம் என்று கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். இந்நிகழ்ச்சிகள் தமிழ் குடும்பகளை ஒன்று கூட்டவும், இலங்கையில் பல நற்பணிகள் செய்ய நிதி திரட்டவும் நடத்தப்படுகிறது. எனவே, ஒரு குடும்பத்துக்கு சாப்பாடு உள்பட இருபதோ முப்பதோ பவுண்கள்தான் (என்று நினைக்கிறேன்). அங்கே சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் மதுபானங்களும்!! (பீர் ஆனாலும் !!!) விற்கப்பட்டன. விற்பனையில் கிடைத்த இலாபம் அனைத்தும் அறக்கட்டளை நிதிக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவு இது.

சின்னத்திரை சில்லெடுப்பு

முதல் நிகழ்ச்சி ஒரு வில்லுப்பாட்டு. தமிழ் தொலைக்காட்சிகளில் அலைபரப்பப்படும் சின்னத்திரைகள் பற்றியும் அதை பார்ப்பதற்கு வீட்டில் அம்மா, அப்பா, பாட்டி என்று ஒவ்வொருவரும் அடிபடுவதைப் பற்றியும் நல்ல நகைச்சுவையோடு சொன்னார்கள். அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் சிறப்பாக பாடினார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியின் ஒலிபரப்புதலுக்கு (Sound system guysக்கு தமிழாக்கம்??) நியமிக்கப்பட்டவர்களின் சாதனங்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. ஒரே இரைச்சலும் கீச்சலுமாக ஒலிபெருக்கி இரைந்து, நிகழ்சிகளில் பாதி புரியவில்லை.

வயலின் இசை

நான் சொல்வதைவிட நீங்களே கேளுங்கள். என்னுடைய படக் கருவியில் நிகழ்படங்கள் எடுக்க முடிந்தாலும் நிகழ்படம் எடுக்கும் கருவிகளின் தரத்துக்கு எடுக்க இயலாது. எனது கையும் தொடக்கத்தில் ஆடி படத்துக்கு ஆட்டம் காட்டிவிட்டது. ஆனால் போகப் போக ஆடாமல் பார்த்துக் கொண்டேன். இந்த சின்னப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளவும்.


பாடல்: அலைபாயுதே கண்ணா


வயலின் - அமுதைப் பொழியும் நிலவே, அருகில் வராததேனோ

கௌரவ விருந்தினர் உரை

கலை நிகழ்ச்சிகளுக்கிடயே லண்டன் நியூஹாம் நகரசபை அங்கத்தவர் (councillor) திரு போல் சத்தியநேசன் அவர்கள் நடத்திய உரை மிகவும் பிடித்திருந்தது. அவர் புலம்பெயர்ந்து வாழ்வது பற்றிக் கூறும்போது எப்படி நம் பிள்ளைகளின் பிள்ளைகள் நம் வரலாற்றை மறந்துவிடக் கூடும் என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தமிழ் வராற்றையேல்லாம் ஒன்று சேர்த்து family tree போல் உருவாக்கினால் பிற்காலத்தில் நம் சந்ததியினருக்கு ஒரு பேர் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அதற்கு நிதி உதவியும் அரசு ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். இப்படி ஒரு குடும்ப வரைபடம் செய்வது என் நீண்ட நாள் கனவு. அதற்காக என் அப்பம்மாவிடம் அவர்களுக்கு தெரிந்த மட்டும் நம் குடும்ப சரித்திரத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். அதற்காக ஒரு நிரலை உருவாக்குவதாக இருந்தேன். அது பிறருக்கும் பயன்படுமெனில் அந்நிரலை உருவாக்க கூடுதல் உந்துதலாக இருக்கும்.

பரதநாட்டியம்


ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே


பரதநாட்டியம் - ஸ்ருதிலயா

கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால், ஒலிச் சாதனங்களின் பிரச்சனை மற்றும் மக்களின் பேச்சு சத்தத்தையும் தாண்டி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியவில்லை. அறிவிப்பாளர்கள் மக்களுக்கு எவ்வளவோ முறை பேச்சுச் சத்ததைக் குறைக்கச் சொல்லி (நிறுத்தச் சொல்லவில்லை) வேண்டினார்கள். அந்த அறிவிப்புகள்கூட மக்களின் பேச்சுச் சத்தத்தில் மூழ்கிப் போயிற்று. இதில் நான் கற்றுக் கொண்டது, விலை கூடினாலும் கலைஞர்களின் திறமையும் உழைப்பையும் பாராட்டும் நிகழ்சிகளுக்கு செல்ல வேண்டும் (இத்தாலியன் ஓப்ரா டிச்கெட் விலை நூறு பவுண்களுக்கு மேல்; ஆங்கில மேடை நாடங்கள்: மூப்பது - அறுபது பவுண்கள்). மேலும், வெளிநாடுகளில் வளர்ந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழையும் தமிழ்க் கலாச்சாரங்களையும் தமிழ் பெற்றொர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனைய இந்திய வளைகுடா மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழர்க்கு தமிழ் பற்று அதிகம்தான்

கூகளின் ஃபயர்ஃபாக்ஸ் தொற்றக்கரு


தன் விருப்ப கூகுள் முகப்புப் பக்கத்தில் (Personalised Google Homepage) அழகழகாய் தோற்றக்கருக்களை (themes) சேர்த்துக் கொள்ளும் வசதி வந்திருக்கிறது என்று ரவி ஏற்கனவே எழுதியிருந்தார்.

அதில் தேனீர்க்கடை தோற்றக்கருவை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா? அதில் இருப்பது வேற யாருமில்லை, நம்ம செல்ல ஃபயர்ஃபாக்ஸ்தான். நமக்கு மட்டுமல்ல, கூகிளார்களுக்கும் ஃபயர்ஃபாக்ஸ் பிடிக்கும்.

கூகளின் புதிய சேவைகள்

கூகள் இலவச இணைய இணைப்பு தருவதாக இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இந்த சேவைக்குப் பெயர் டிஸ்ப் (TiSP). இந்த இணைப்பு முதல் 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தருகிறார்களாம். நான் இந்த சேவைக்கு பதியும்போது வேறும் ஆயிரத்தி இருநூற்றி பத்து இடங்களே எஞ்சியிருந்தது. எனவே சீக்கிரம் செயல்படுங்கள்.

ஜீமெயிலிலுல் இன்னொரு சேவையை வெளியிட்டுள்ளார்கள். உங்கள் ஜீமெயிலில் இருக்கும் சில மடல்களை படி எடுக்க நினைத்திருப்பீர்கள். ஆனால் அச்சுப் பொறியில்(printer) மை தீர்ந்ததாலோ அல்லது அச்சிடும் காிகிதம் முடிந்ததாலோ ( அல்லது நீங்கள் வடிகட்டின கஞ்சன் என்பதாலோ) விரும்பிய மடல்களை அச்சில் ஏற்றியிருக்க முடியாது. இக்குறைய போக்க வந்ததுதான் "காகித ஆவணமாக்கு" என்ற ஜீமெயில் விசை. உங்களுக்கு தேவையான மடல்களைத் தேர்வு செய்து இந்த விசையை அழுத்திவிட்டால் அடுத்த ஒரிரு வணிக தினங்களில் மடல்களின் காகிதப்படி(papercopy) உங்கள் வீடுதேடி வரும். படங்கள் மடலோடுி இணைக்கப் பட்டிருந்தால், அவை உயர்தர நிழற்படங்களுக்குகந்த தாள்களில் அச்சிடப்பட்டு அனுப்பப்படும். நீங்கள் பல பக்கங்கள் கொண்ட பல மடல்களின் பல படிகளைக் கேட்டுப் பெறலாம். இவ்வெண்ணிக்கைகளுக்கு உயர் எல்லை ஏதுமில்லை.

கட்சிக்காரர்கள், நடிகர் சங்கங்கள் போன்றொர் இந்த சேவையை பொஸ்டர் அடிக்க துஷ்பிரயோகம் செய்யும் அபாயமுள்ளது. அந்த நிலை உருவானல் இந்த சேவை இரத்து செய்யப்படலாம். எனவே முந்துங்கள். இப்படி பல சிறப்புகளையுடைய இந்தச் சேவையை எதற்காக இலவசமாகத் தரவேண்டும்? 1ரூபாய் இன்லன்ட் லேட்டரில் ராமாயணத்தேயே எழுதுபவர்களையும், இலவசம் என்றால் புண்ணாக்கைக் கூட ஒரு கட்டு கட்டுபவர்களையும், மின்னஞ்சல் என்றால் என்ன என்று தெரியாதவர்களையும் தன்பக்கம் இழுப்பதற்காக கூகள் செய்யும் சூழ்சியாகத் தெரிகிறது. ஆகவே சற்று கவனாமா இருங்கள் மக்களே!

முந்தாநேற்றுதான் கூகள் சீரியஸான முகத்தோடு செய்யும் நக்கல் நையாண்டிகள் பற்றி பதிந்திருந்தேன். நேற்று ஏப்பிரல் 1, முட்டாள்கள் தினமில்லையா அதாற்கான கூகளின் டூப்தான் இந்த இலவச இணைய இணைப்பும், ஜீமெயிலின் காகித ஆவணமாக்கும் சேவையும். உண்மைன்னு நம்பி இந்த இடுகைய படிச்சிருந்தீங்கனா .... .... ...

கூகளின் குசும்பு

பொதுவாக பெரிய பன்னாட்டு நிறுவனங்களென்றால் பல விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள், ஏதையுமே கொஞ்சம் சீரியஸா எடுத்துக் கொள்வார்கள், விளையாட்டுத் தனமாய் இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணுவீர்கள். ஆனால் இதுக்கெல்லாம் நேர்மாறு கூகள்தான். கூகள் போன்று நகைச்சுவை உணர்வுள்ள நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை (அப்படியொரு நிறுவனத்தை உங்கள் யாருக்காவது தெரிந்தால் மறுமொழியில் சொல்லுங்களேன்). சும்மா சொன்னா மட்டும் போதுமா உதாரணம் எதும் இல்லையான்னு நீங்க சொல்றது கேட்குது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.

1. நிலவில் ஆராய்ச்சிக் கூடம்

ஜூலை 20, 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தார். இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்து முப்பதியாறு ஆண்டுகள் ஆனதை நினவு கூறும் வகையில், ஜூலை 2005இல் கூகுள் தனது கூகள் நிலவு சேவையை வெளியிட்டது. இதோடு நிற்காமல் தாங்கள் நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை துவங்க இருப்பதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவயென்றும் தன் சொந்த இணையப் பக்கத்திலேயே விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் படித்து பாருங்கள் மிகவும் சுவரஸ்யமாகயும் நகைச்சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். சும்மா காமெடிக்காக மட்டும் எழுதாம நல்லா சிந்திச்சு எழுதியிருக்காங்க.

2. புறாக்களின் தரவரிசைப் பட்டியல்

லாரி பேஜும் சேர்கே ப்ரினும்கூகளின் தேடல் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கம் தந்தார்கள். இதுவும் அவர்களின் காமெடிதான். என்ன புரியலையா? உலக இணைய வலையின் கன்னிப் பருவத்தில் ஒரு சில நல்ல தேடல் இயந்திரங்களே இருந்தன. அப்போது ஸ்டான்ஃபொர்ட் பல்கலைகழகத்தில் லாரி பேஜும், ஸேர்கே ப்ரினும் முனைவர் ஆவதற்கு ஆராய்ந்து கொண்டுருந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்து என்னவென்றால் இணையத்தில் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு பக்கம் இருந்தால், அந்த விடயத்திற்குரிய பல சொற்களைக் கொண்டு மற்ற இணையப் பக்கங்கள் அந்த விடயமிருக்கும் பக்கத்திற்கு இணைப்புகள் தரும். அவர்களின் ஆராய்ச்சியில் உருவானதுதான் கூகள். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் பக்கத் தரவரிசைத்(page rank) தொழில்நுட்பம். இணையம் எவ்வளவு பெரியது! அதில் உள்ள இணையப் பக்கங்கள் அனைத்தையும் பகுத்தாய்ந்து அவைபற்றிய குறிச்சொற்களை சேமிப்பதற்கு அதிகளாவிய கணிக்கும் திறனுள்ள கணினிகளைத்தானே(supercomputers) பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த அருங்காரியத்தை சாதாரண கணினிகளை குழுக்களிட்டு (PC Clusters) கூகள் செய்து முடிக்கிறது. இதையே முன்குறிப்பிட்ட விளக்கப் பக்கத்தில் "புறாக் கூட்டம்" (pigeon cluster) என்று நக்லாய் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் பொதுவாக எல்லொருக்கும் தெரிந்தவை. இப்படி பகிரங்கமாகச் சொல்லாமல் என்னென்ன செய்திருப்பார்கள் கூகள்காரர்கள்? இன்று அருணின் பதிவில் கூகளின் இன்னொரு நக்கலைப் பத்தி எழுதியிருந்தார் (அந்த பதிவின் உந்துதலால் வந்ததுதான் இந்தப் பதிவு).

கூகள் மப்ஸ் மூலம் உலகின் வரைபடங்களைப் பார்க்கலாம். பார்பதோடு மட்டுமின்றி பல நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழியையும் கணிக்கலாம். இது துவங்கும் இடமும் முடியும் இடமும் வேவ்வேறு நாடுகளில் இருந்தாலும் வேலை செய்யும். அப்படி நியூ யோர்கிலிருந்து லண்டன் வருவத்திற்கான வழியைத் தேடினால் கூகள் மப்ஸ் காட்டும் வழி இதோ:அப்படித் தப்பா ஒன்னும் தெரியலையில்லையா? ஆனா இடதுபுறமிருக்கும் வழிகாட்டும் குறிப்புகளைப் பார்த்தீர்களா?

இருபத்திமூன்றாவது குறிப்பில் "அட்லான்டிக் கடலை நிச்சலடித்துக் கடக்கவும்" என்று வழிகாட்டி இருக்கிறார்கள். இது நக்கல்தானே :)

வேலை செய்வதற்கு கூகள் சிறந்த நிறுவனம். பிற்காலத்தில் அங்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் ...

நொவலின் லினக்ஸ் விளம்பரம்

ஆப்பிளின் "ஒரு மேக் வாங்குங்கள்" ("Get a Mac") விளம்பர பிரச்சாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் அப்பிரச்சாரத்தில் வெளிவந்த குறும்படங்களையும் பார்த்திருப்பீர்கள். வெள்ளைப் பின்னணி, மெருதுவான இசை, சாதாரண உடையில் ஒருவர், கோட் சூட்டில் ஒருவர் என்று குறும்படங்கள் ஒரே பாணியில் இருக்கும். சாதா உடையில் இருப்பவர் தன்னை ஒரு மேக் என்றும் கோர் சூட் போட்டவர் தன்னை ஒரு வின்டோஸ் கணினி என்றும் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பின்னர் தன் அருமை பெருமைகளைப் பற்றி அலட்டுவார்கள் சொல்வார்கள். இது போன்ற விளம்பரங்கள் லினக்ஸுக்கு இல்லை. அந்த குறையைப் போக்கியுள்ளது நொவல் (Novell) நிறுவனம். நொவெல் லினக்ஸின் விளம்பரக் குறும்படங்கள் இதோ:

1. உலகில் நெம்பர் ஓன்

வின்டோஸும் ஃமெக்கும் மாறி மாறி நான்தான் கணினியுலகில் முதலிடம் என்று அடிபடுகிறார்கள். கடைசியில் கணினி உலகில் நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்று சந்தோஷப்படுகிறார்கள். அப்பொழுது லினக்ஸ் வந்து "உலகில் ஏறக்குறைய 3 கோடி லினக்ஸ் பயனர்கள் உள்ளார்கள்" என்று கூறுகிறார். வின்டோஸும் மேக்கும் "ஹ்ம்ம்! எவ்வளவு நாட்களாக நீங்கள் கணினி உலகில் உள்ளீர்கள்?" என்று கேட்க, லினக்ஸ் "வெகு நாட்களாக" என்று முடிக்கிறார்.


பின்குறிப்பு: வழமையாக லினக்ஸ் பயனர்கள் என்றால் சோடா புட்டி அணிந்த புத்தகப் பூச்சி என்று அடிக்கடி ஊடகங்களில் காட்டப்படுவதுண்டு. இந்த விளம்பரத்தில் இதற்கு மாறாக ஒரு அழகான பெண்மணி லினக்ஸாக வருவது, சாதாரண மக்கள் உபயோகிக்கக் கூடிய ஒரு இயங்குதளமாக லினக்ஸ் முன்னேறியுள்ளதைக் காட்டுகிறது.

2. காலத்திற்கேற்ற கோலம்

வின்டோஸ் அவருடைய புதிய விஸ்டாவை பற்றியும் மேக் அவருடைய லெபெர்ட் பற்றியும் பீற்றிக் கொள்கிறார்கள். அவர்களுடைய புதுத் தோற்றத்தைப் பற்றி லினக்ஸ் கேட்டுக் கொண்டு இருக்கும்போது, ஒருவர் வந்து லினக்ஸுக்கு புது ஜக்கெட்டையும் கண்ணாடியையும் அணிவிக்கிறார். "என்ன இது" என்று வின்டோஸ் கேட்க, "காலத்திற்கேற்ற கோலம்" என்கிறார் லினக்ஸ். "இதையெல்லாம் உங்களுக்கு இலவசமாக கொடுப்பார்களா!!" என்று மேக் வியக்கிறார். வின்டோஸோ "நான் இதே தோற்றத்தை இன்னும் ஆறாண்டுகள் மெயின்டெய்ன் பண்ணிக்குவேன்" என்று பெருமைப்படுகிறார்.


பின்குறிப்பு: வின்டோஸ் மேக் போல் லினக்ஸ் ஒரே ஒரு நிறுவனத்தின் சொத்தல்ல. ஆதலால், லினக்ஸின் தோற்றம் மாறிக் கொண்டேயிருக்கும். உதாரணத்துக்கு உபுண்டு லினக்ஸ் வழங்கல், வருடத்திற்கு இருமுறை புதிய வெளியீடுகளைத் தருகிறது.

3. எந்தக் கணினியிலும் லினக்ஸ் இயங்கும்

இந்தக் குறும்படத்தில் வின்டோஸும் மேக்கும் அவர்களினுடம் உள்ள சிறந்த நிரல்களை ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இருவரும் லினக்ஸை பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வந்த லினக்ஸ் "நீங்கள் லினக்ஸைப் பயன்படுத்துகிறீர்களா?" என்று கேட்க, மற்ற இருவரும் முதலில் மறுக்கிறார்கள், பின்னர் ஒப்புக் கொள்கிறார்கள்.


பின்குறிப்பு: வின்டோஸ் விஸ்டாவை எல்லாக் கணினிகளிலும் நிறுவ முடியாது. ஏனேனில் பில் கேட்ஸைப் பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு முன் வந்த கணினிகள் எல்லாம் பழையது. விஸ்டாவினை புதிய கணினிகளிலோ அல்லது சில வருடங்களுக்கு முன் வாங்கிய விலையுயர்ந்த கணினியிலோ மட்டும்தான் நிறுவ முடியும். வின்டோஸ் மென்பொருளின் விலையும் வாங்கும் கணினியின் விலையை உயர்த்துகிறது.
ஆப்பிளின் மேக் இயங்குதளம் ஆப்பிளின் கணினியில் மட்டும்தான் நிறுவ முடியும். ஆப்பிள் கணினிகள் சாதாரணக் கணினிகளைக் காட்டிலும் விலை உயர்ந்தவை.. தற்காலிகமாக ஆப்பிள் கணினிகளில் வின்டோஸையும் பாவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதைக் காட்டி தங்களின் கணினிகளின் அதிக விலையை நியாயப்படுத்துகிறார்கள். லினக்ஸ் கணினி மட்டுமல்லாமல் கைத்தொலைபேசி போன்ற மற்ற சாதனங்களையும் இயக்கும் திறமையுடையது. லினக்ஸ் இலவசமாகக் கிடைப்பதால் அதைனை உபயோகிக்கும் உபகரணங்களின் விலை குறைவாக இருக்கும். லினக்ஸ் ஒரு திறந்த ஆணைமூல நிரல் என்பதால் எவரும் எப்போதும் லினக்ஸை தனக்கெற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

தமிழ்ப் பைத்தியம்

எனக்குத் தமிழென்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமில்ல, பொதுவா தமிழர்கள் மொழிப்பற்று உடையவர்கள். பிற்காலத்தில் இந்திய மொழிகள் அனைத்திலும் கணினியிலும் இணையத்திலும் இன்னபிற தொழிநுட்பத் துறைகளிலும் தமிழ் முதன்மை அடைய தமிழரின் மொழிப்பற்றும் ஒரு காரணமாக இருக்கும். எங்க தொடங்கி எங்கயொ போயிட்டேன். என்னுடைய தமிழ்ப் பைத்தியம் காரணமாக ஒழுங்காக கல்லூரிப் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ரவி போன்ற பிற தமிழ் ஆர்வலர்களுக்கும் இதே நிலமைதான். சர்கஸ் கோமாளி பந்துகளை juggle செய்வதுபோல், உயர்படிப்பையும் தமிழார்வத்தையும் மாற்றி மாற்றி கவனிக்க வேண்டியுள்ளது.

நீண்ட நாள் தமிழ்ப் படைப்புகளை படிக்காததாலும் எழுதாததாலும் சில இலக்கண மரபுகள் மறந்துபோனது. என் தமிழ்ச் சொல்வளமும் குன்றிப் போனது. இதை நிவர்த்தி செய்யவே தமிழ் வலைப் பதிவுகளை படிக்கத் துவங்கினேன். கூகளின் மூலமும் இணையத்தில் கிடைத்த நண்பர்கள் மூலமாகவும் நல்ல தமிழ்ப் பதிவுகளைக் கண்டுபிடித்து என்னுடைய கூகள் ஓடையகத்தில் (Google Reader) சேர்த்துள்ளேன். கல்லூரியில் வேலைப்பளு கூடினால், நான் அனைத்து பதிவுகளையும் படிப்பதில்லை. இப்படிக் குவிந்த பதிவுகளை எல்லாம் இந்த விடுமுறையில் படித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் மண் விழுந்துவிட்டது.

ஒரு பதிவு படிக்கும்போது அந்த பதிவை என் மனதில் மொழிபெயர்த்துப் பார்ப்பேன். அப்பொழுது அகப்படும் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை விக்சனரியில் சேர்த்துவிடுவேன். இப்படி ஒரு வாரம் ஆகியும், என் ஒடையகத்திலுள்ள பதிவுகளைப் படித்தபாடில்லை. கூகள் ஓடையகத்தில் 'trends' என்று ஒரு சேவை உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஓடையகத்தில் சேமித்துள்ள பதிவுகள், உங்களின் பதிவு வாசிக்கும் பழக்கங்கள் போன்றவை பற்றிய புள்ளிவிவரங்களை அறிய முடியும். என்னுடைய பதிவுகள் வாசிக்கும் பழக்கங்கள் பற்றிய புள்ளிவிவரம் கீழே.
இப்புள்ளி விவரத்தின்படி, துங்கிற நேரம்(6-12) தவிர மற்ற நேரம் எல்லாம் பதிவுகளைப் படிப்பதில் செலவிடுகிறேன். இந்த நேரங்களில் பதிவுகள் மட்டும் படிக்காமல், விக்சனரி, Facebook, மடற்குழு போன்றவற்றிற்கும் செலவிடுகிறேன். இருக்கிற மூன்று வாரத்தில் நல்லபிள்ளையா கல்லூரி வேலைகளை முடித்தால்தான் விடுமுறைக்குபின் அல்லோலப் படாமல் இருக்கலாம். ஆதாலல், இனி கல்லூரி வேலைக்கு பிறகுதான் தமிழ்தொண்டு (...ஹ்ஹ்ம்ம்ம் இதெல்லாம் தமிழ்த்தொண்டா...).

பி.கு.: இந்த பதிவு எழுதுவதற்கே இரண்டு மணி நேராமாச்சு :( ஆனாலும் பிற்காலத்தில இதே தப்பு செய்யாமல் இருக்க இது உதவும் என்று எண்ணத்தில் எழுதிவிட்டேன். சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் மறுமொழியில் தெரிவியுங்கள். முடிந்தால் தமிழ் விக்சனரியில் சேர்த்துவிடுங்கள்.

மடை திறந்து பாடல்

பாடல் : மடை திறந்து பாடும் நதியலை நான்.
படம் : நிழல்கள்.
குரல் : S P பாலசுப்ரமணியம்.
இசை : இளையராஜா.
பாடலாசிரியர் : வைரமுத்து (அல்லது) வாலி


இந்த பாடலை ஒரு சொல்லிசை பாடலாக Remix செய்திருப்பதை ரவிசங்கர் அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த Remix பாடல் இதோ:


மேலிருக்கும் பாடலை இசையமைத்து பாடியவர்கள் "வல்லவன்". அவர்களின் இணையதளத்திற்குச் சென்று அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு, இவர்களின் இசைத்தட்டுகளை ஐ.இ.(UK)ல் எங்கே வாங்குவதென்று பார்ப்போமென்றால், பக்கம் முழுவதும் flashஆல் செய்திருக்கிறார்கள். Flash எல்ல கணணிகளிலும் சரியாக வேலை செய்யாது. அது மட்டுமின்றி Google போன்ற தேடல் இயந்திரங்களால் Flashஆல் கொண்டு செய்யப்பட்ட பக்கங்களைச் சரியாக பகுத்தாய்ய(analyse) இயலாது. இதனால் தேடல் முடிவுகளில் அவர்கள் பக்கம் முதலிடம் வகிக்காது. இந்த குறைபாடுகளை நிவேர்தி செய்ய முயலுவார்களா?? இவர்கள் மட்டுமின்றி ஏனைய தமிழ்ப் பக்கங்களும் முடிந்தளவு flashஐ தவிர்ப்பது நல்லது.

பாரிசும் யாழும்

நான் கடந்த நர்தார் விடுமுறையின்போது பாரிஸுக்குச் சென்றிருந்தேன். அங்கு sacre coeur/sacred heart எனும் தேவாலயம் உள்ளது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மோன்மார்ட்ரெ(Monmartre) மலையின் மீது கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் வேலைப்பாடுகள் பிரமாதம். மாமல்லபுரம் அளவுக்கு இல்லாட்டிலும், சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் அழகாகவே இருந்தது.

ஆலயத்தினுள், புகைப்படமெடுக்க முடியவில்லை. உள்ளே, ஒலிபெருக்கிகளில் தவழ்ந்துவரும் தியான ஒலியைக் கேட்டவுடன் மனதினில் ஒரு அமைதி. ஆலயத்தை சுற்றி வருகையில் ஓரிடத்தில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதனருகே, ஆலயத்தின் மின்சார மற்றும் தண்ணீர் செலவுகளுக்கு பக்தர்கள் காணிக்கையளித்து உதவுமாறு வேண்டி பல மொழிகளில் எழுதியிருந்தனர். தமிழிலிலும் எழுதியிருந்தார்கள். சாதராணமா ஒன்னோ இல்ல ரெண்டொ யுரொ மட்டும் போட்டிருப்பபேன். தமிழ்ல எழுதினதால 10 யுரொ போட்டேன்.

ஆலயத்தின் வெளிப் படிக்கட்டுகளில் பலர் அவர்களின் திறமையைக் காட்டி தானமீட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்தர் அழகாக யாழை மீட்டிக் கொண்டிருந்தார். அதைக் கீழே காணலாம்



மேலும் இவ்வாலயத்தைச் சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் எராளம். அதை இன்னொரு பதிவில் ஏற்றுகிறேன்.

இங்கிலாந்தில் பனி

கடந்த அரையாண்டு கல்லூரிப் படிப்பில் வேலைப் பளு ரொம்ப ஜாஸ்தி. இரவு பகல் பாராமல் வேலை செய்தும் சில பாடங்களுக்குரிய courseworkகளை உரிய நேரத்தில் கொடுக்க இயலாமல் தவித்தேன். ஒரு வழியாக இன்றுதான் முடித்த வேலைகளையெல்லாம் கொடுத்துவிட்டேன். இதோ நான் எனது பாடத்துக்காக செய்த இணையதளம்.

நேற்று அதிகாலை இங்கிலாந்தில் பல இடங்களில் பனி பெய்தது. நான் கல்லூரியில் தங்கியிருக்கும் வீட்டின் பின்புறப் புல்வெளியும் ஒரே வெள்ளையாக மாறியிருந்தது.


நான் இங்கிலாந்து வந்து ஆறு வருடங்களுக்கு மேல்லாகிறது. இவ்வளவு பனியை பார்த்தது இதுவே நாலோ ஐந்தாவது முறை. இந்தியாவில் எண்ணுவதுபோல் இங்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் பனிபெய்வதில்லை. அப்படி பெய்தால் போதும், எல்லாருக்கும் ஒரே குஜால். உடனே பனியுருண்டை செய்து செல்லச் சண்டை போட களமிறங்கி விடுவார்கள். இல்லாவிடில், 'பனி மனிதர்' ஒன்றை உருவாக்கி, அலங்கரித்து, பெயர் வைத்து விடுவார்கள். நாமக்கெல்லாம் இதல்லாம் ஒத்து வராது. அதான் படமெடுத்து ஒரு பதிப்பெழுதி முடித்துக் கொண்டேன் :)

மழை: போக்கிரி - தமிழ் சினிமாவின் சாபக்கேடு!

மழை: போக்கிரி - தமிழ் சினிமாவின் சாபக்கேடு!

விஜய் படங்கள் பார்பதை நிறுத்தி ரொம்பா நாள் ஆச்சு. போக்கிரி பார்க்கலாம் என்று இருந்தேன், நல்லவேளை பிழைத்துக் கொண்டேன்.

என் முதல் தமிழ் வலைப்பதிப்பு

நான் 2005இல் எனது முதல் வலைப்பதிவை தொடங்கினேன். தொடங்கியதன் காரணம்: "வலைப் பதிவுகள்" பற்றித் தொலைக்காட்சியிலும், இணையதளங்களிலும், எனது கல்லூரியிலும் ஒரே பேச்சு. முதன் முதலில் என்னைப் பற்றியும், நான் வலையில் கண்ட நகைச்சுவையான பக்கங்கள் பற்றியும் எழுதினேன். எனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கிய பின்னர், என்ன சுவாரஸ்யமாக இருந்தாலும் எழுத்தினேன்.

வீட்டில் உள்ளவரை தினமும் தமிழில் உரையாட முடிந்தது. ஆனால் கல்லூரிக்கு வந்தபின், எங்கு சென்றாலும் ஆங்கிலம். பேசினால் ஆங்கிலம், படித்தால் ஆங்கிலம், எழுதினால் ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம், ஆங்கிலம்!!! தமிழ் மறந்துவிடுமோ என பயம் வந்துவிட்டது. எனவே இந்த தமிழ் வலைப் பதிப்பை தொடங்கியுள்ளேன். இனி வாரத்திற்கு ஒரு முறையாவது இங்கு எழுதவெண்டும் என்று ஆசை. காலப்போக்கில் என்ன நடக்குதென்று பார்க்கலாம் :)

பின்குறிப்பு: தமிழில் நீண்டநாள் எழுதாதல், சில எழுத்துப்பிழைகளோ இலக்கணப் பிழைகளோ இருக்கலாம். அப்படி இருப்பின், தயவு செய்து என்னைத் திருத்தவும்.

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்