Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

கூகளின் புதிய சேவைகள்

கூகள் இலவச இணைய இணைப்பு தருவதாக இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள். இந்த சேவைக்குப் பெயர் டிஸ்ப் (TiSP). இந்த இணைப்பு முதல் 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தருகிறார்களாம். நான் இந்த சேவைக்கு பதியும்போது வேறும் ஆயிரத்தி இருநூற்றி பத்து இடங்களே எஞ்சியிருந்தது. எனவே சீக்கிரம் செயல்படுங்கள்.

ஜீமெயிலிலுல் இன்னொரு சேவையை வெளியிட்டுள்ளார்கள். உங்கள் ஜீமெயிலில் இருக்கும் சில மடல்களை படி எடுக்க நினைத்திருப்பீர்கள். ஆனால் அச்சுப் பொறியில்(printer) மை தீர்ந்ததாலோ அல்லது அச்சிடும் காிகிதம் முடிந்ததாலோ ( அல்லது நீங்கள் வடிகட்டின கஞ்சன் என்பதாலோ) விரும்பிய மடல்களை அச்சில் ஏற்றியிருக்க முடியாது. இக்குறைய போக்க வந்ததுதான் "காகித ஆவணமாக்கு" என்ற ஜீமெயில் விசை. உங்களுக்கு தேவையான மடல்களைத் தேர்வு செய்து இந்த விசையை அழுத்திவிட்டால் அடுத்த ஒரிரு வணிக தினங்களில் மடல்களின் காகிதப்படி(papercopy) உங்கள் வீடுதேடி வரும். படங்கள் மடலோடுி இணைக்கப் பட்டிருந்தால், அவை உயர்தர நிழற்படங்களுக்குகந்த தாள்களில் அச்சிடப்பட்டு அனுப்பப்படும். நீங்கள் பல பக்கங்கள் கொண்ட பல மடல்களின் பல படிகளைக் கேட்டுப் பெறலாம். இவ்வெண்ணிக்கைகளுக்கு உயர் எல்லை ஏதுமில்லை.

கட்சிக்காரர்கள், நடிகர் சங்கங்கள் போன்றொர் இந்த சேவையை பொஸ்டர் அடிக்க துஷ்பிரயோகம் செய்யும் அபாயமுள்ளது. அந்த நிலை உருவானல் இந்த சேவை இரத்து செய்யப்படலாம். எனவே முந்துங்கள். இப்படி பல சிறப்புகளையுடைய இந்தச் சேவையை எதற்காக இலவசமாகத் தரவேண்டும்? 1ரூபாய் இன்லன்ட் லேட்டரில் ராமாயணத்தேயே எழுதுபவர்களையும், இலவசம் என்றால் புண்ணாக்கைக் கூட ஒரு கட்டு கட்டுபவர்களையும், மின்னஞ்சல் என்றால் என்ன என்று தெரியாதவர்களையும் தன்பக்கம் இழுப்பதற்காக கூகள் செய்யும் சூழ்சியாகத் தெரிகிறது. ஆகவே சற்று கவனாமா இருங்கள் மக்களே!

முந்தாநேற்றுதான் கூகள் சீரியஸான முகத்தோடு செய்யும் நக்கல் நையாண்டிகள் பற்றி பதிந்திருந்தேன். நேற்று ஏப்பிரல் 1, முட்டாள்கள் தினமில்லையா அதாற்கான கூகளின் டூப்தான் இந்த இலவச இணைய இணைப்பும், ஜீமெயிலின் காகித ஆவணமாக்கும் சேவையும். உண்மைன்னு நம்பி இந்த இடுகைய படிச்சிருந்தீங்கனா .... .... ...

கூகளின் குசும்பு

பொதுவாக பெரிய பன்னாட்டு நிறுவனங்களென்றால் பல விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள், ஏதையுமே கொஞ்சம் சீரியஸா எடுத்துக் கொள்வார்கள், விளையாட்டுத் தனமாய் இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் எண்ணுவீர்கள். ஆனால் இதுக்கெல்லாம் நேர்மாறு கூகள்தான். கூகள் போன்று நகைச்சுவை உணர்வுள்ள நிறுவனத்தை இதுவரை நான் பார்த்ததில்லை (அப்படியொரு நிறுவனத்தை உங்கள் யாருக்காவது தெரிந்தால் மறுமொழியில் சொல்லுங்களேன்). சும்மா சொன்னா மட்டும் போதுமா உதாரணம் எதும் இல்லையான்னு நீங்க சொல்றது கேட்குது. இதோ சில எடுத்துக்காட்டுகள்.

1. நிலவில் ஆராய்ச்சிக் கூடம்

ஜூலை 20, 1969ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தார். இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்து முப்பதியாறு ஆண்டுகள் ஆனதை நினவு கூறும் வகையில், ஜூலை 2005இல் கூகுள் தனது கூகள் நிலவு சேவையை வெளியிட்டது. இதோடு நிற்காமல் தாங்கள் நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை துவங்க இருப்பதாகவும், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவயென்றும் தன் சொந்த இணையப் பக்கத்திலேயே விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் படித்து பாருங்கள் மிகவும் சுவரஸ்யமாகயும் நகைச்சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். சும்மா காமெடிக்காக மட்டும் எழுதாம நல்லா சிந்திச்சு எழுதியிருக்காங்க.

2. புறாக்களின் தரவரிசைப் பட்டியல்

லாரி பேஜும் சேர்கே ப்ரினும்கூகளின் தேடல் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று விளக்கம் தந்தார்கள். இதுவும் அவர்களின் காமெடிதான். என்ன புரியலையா? உலக இணைய வலையின் கன்னிப் பருவத்தில் ஒரு சில நல்ல தேடல் இயந்திரங்களே இருந்தன. அப்போது ஸ்டான்ஃபொர்ட் பல்கலைகழகத்தில் லாரி பேஜும், ஸேர்கே ப்ரினும் முனைவர் ஆவதற்கு ஆராய்ந்து கொண்டுருந்தார்கள். அவர்கள் கண்டுபிடித்து என்னவென்றால் இணையத்தில் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு பக்கம் இருந்தால், அந்த விடயத்திற்குரிய பல சொற்களைக் கொண்டு மற்ற இணையப் பக்கங்கள் அந்த விடயமிருக்கும் பக்கத்திற்கு இணைப்புகள் தரும். அவர்களின் ஆராய்ச்சியில் உருவானதுதான் கூகள். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததுதான் பக்கத் தரவரிசைத்(page rank) தொழில்நுட்பம். இணையம் எவ்வளவு பெரியது! அதில் உள்ள இணையப் பக்கங்கள் அனைத்தையும் பகுத்தாய்ந்து அவைபற்றிய குறிச்சொற்களை சேமிப்பதற்கு அதிகளாவிய கணிக்கும் திறனுள்ள கணினிகளைத்தானே(supercomputers) பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த அருங்காரியத்தை சாதாரண கணினிகளை குழுக்களிட்டு (PC Clusters) கூகள் செய்து முடிக்கிறது. இதையே முன்குறிப்பிட்ட விளக்கப் பக்கத்தில் "புறாக் கூட்டம்" (pigeon cluster) என்று நக்லாய் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் பொதுவாக எல்லொருக்கும் தெரிந்தவை. இப்படி பகிரங்கமாகச் சொல்லாமல் என்னென்ன செய்திருப்பார்கள் கூகள்காரர்கள்? இன்று அருணின் பதிவில் கூகளின் இன்னொரு நக்கலைப் பத்தி எழுதியிருந்தார் (அந்த பதிவின் உந்துதலால் வந்ததுதான் இந்தப் பதிவு).

கூகள் மப்ஸ் மூலம் உலகின் வரைபடங்களைப் பார்க்கலாம். பார்பதோடு மட்டுமின்றி பல நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழியையும் கணிக்கலாம். இது துவங்கும் இடமும் முடியும் இடமும் வேவ்வேறு நாடுகளில் இருந்தாலும் வேலை செய்யும். அப்படி நியூ யோர்கிலிருந்து லண்டன் வருவத்திற்கான வழியைத் தேடினால் கூகள் மப்ஸ் காட்டும் வழி இதோ:அப்படித் தப்பா ஒன்னும் தெரியலையில்லையா? ஆனா இடதுபுறமிருக்கும் வழிகாட்டும் குறிப்புகளைப் பார்த்தீர்களா?

இருபத்திமூன்றாவது குறிப்பில் "அட்லான்டிக் கடலை நிச்சலடித்துக் கடக்கவும்" என்று வழிகாட்டி இருக்கிறார்கள். இது நக்கல்தானே :)

வேலை செய்வதற்கு கூகள் சிறந்த நிறுவனம். பிற்காலத்தில் அங்கு வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் ...

என்னைப் பற்றி

பெயர்:
துரைசிங்கம் சாரங்கன்
தொழில்:
தற்போது பல்கலைக் கழக மாணவன்
துணுக்கு:
இலங்கையில் பிறந்து,
இந்தியாவில் வளர்ந்து,
இங்கிலாந்தில் வாழும்,
ஒரு இ. தமிழன் ;-)

அண்மையில் கேட்ட பாடல்கள்

இணைப்புகள்

பார்வையாளர்கள்